பழிக்குப்பழி கொலை முயற்சி பரபரப்பு உளுந்தூர்பேட்டையில் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு திரும்பிய ரவுடி கும்பல் மீது பயங்கர தாக்குதல். - தமிழக குரல் - கள்ளக்குறிச்சி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 25 May 2026

பழிக்குப்பழி கொலை முயற்சி பரபரப்பு உளுந்தூர்பேட்டையில் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு திரும்பிய ரவுடி கும்பல் மீது பயங்கர தாக்குதல்.

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பழிக்குப்பழியாக நடந்ததாக கூறப்படும் கொலை முயற்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரை வழிமறித்து பட்டாகத்தி, வீச்சருவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், காரை நிறுத்தாமல் தப்பித்து சென்றதால் இருவர் நூல் இழையில் உயிர் தப்பியுள்ளனர்.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்த குரு பாண்டியன் மற்றும் அவரது சகோதரர் பாலமுருகன் ஆகியோர், கடந்த ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற கொலை வழக்கில் தொடர்புடையவர்களாக கைது செய்யப்பட்டு சிறையில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர், தினமும் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில், குரு பாண்டியன் மற்றும் பாலமுருகன் ஆகியோர் தங்களது உறவினர்கள் இருவருடன் காரில் உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்து கையெழுத்திட்டு மீண்டும் காரைக்குடி நோக்கி புறப்பட்டனர்.


அவர்கள் உளுந்தூர்பேட்டை – சேலம் சாலை ரவுண்டானா பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, பின்தொடர்ந்து வந்த மற்றொரு கார் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் திடீரென அவர்களின் காரை வழிமறித்தது. பின்னர் பட்டாகத்தி, வீச்சருவாள் உள்ளிட்ட கொடூர ஆயுதங்களுடன் காரை தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.


இதனால் அதிர்ச்சியடைந்த குரு பாண்டியன் தரப்பினர், காரை நிறுத்தாமல் வேகமாக திருப்பி மீண்டும் உளுந்தூர்பேட்டை நோக்கி தப்பிச் சென்றனர். இதனால் தாக்குதல் நடத்த வந்த கும்பலின் திட்டம் தோல்வியடைந்தது.


தாக்குதல் நடத்த வந்தவர்கள் குரு பாண்டியன் மற்றும் பாலமுருகன் ஆகிய இருவரையும் கொலை செய்யும் நோக்கில் வந்ததாக போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவ இடத்தில் ஒரு இருசக்கர வாகனத்தை விட்டு, மற்றொரு காரில் அந்த கும்பல் தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.


பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. தகவலறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.


மேலும், கொலை முயற்சியில் ஈடுபட்ட மர்ம கும்பலை கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். குரு பாண்டியன் மற்றும் அவரது சகோதரர் பாலமுருகன் ஆகியோரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



D.செல்வம் 

கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் 

தமிழக குரல்.

No comments:

Post a Comment

Post Top Ad